Q: சார் ! நான் ஒரு மாணவன். பொதுவாக கான்கிரீட் தளம் அமைக்கும் போது., ஆங்காங்கே மின்தேவைக்காக பிவிசி குழாய்கள் பதிக்கிறோம். இதனால் கான்கிரீட் தளத்தின் தடிமன் பாதிக்கப்படாதா? ஆறு அங்குல தளத்தில் கான்கிரீட் ஒரு அங்குலம் பைப் இடையில் வந்தால்., கான்கிரீட் அடர்த்தி பாதிக்குமே? - ஆர். வினோத் சம்பத், சிவகாசி
காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களை எடுத்துச் செல்வதால் காங்கிரீட்டின் அடர்த்தி ஒரு சிறிது (குழாய்கள் செல்லுமிடத்தில் மட்டும்) பாதிக்கப்படவே செய்கிறது. அப்படி பிவிசி குழாய்களைச் சுற்றியுள்ள காங்கிரீட்டோடு பிணைப்புத் தன்மையும் குறைவதால் பிணைப்பு விரிசல்களும் (Bond Cracks) ஏற்படவே செய்கின்றன. ஆனால், இந்தப் பாதிப்பு குறிப்பிடத்தக்க பெரிய அளவுக்குக் காங்கிரீட்டின் தாங்குதிறனைக் குறைப்பதில்லை. எனவே, அச்சமின்றி காங்கிரீட் கூரைப்பலகத்தினுள் மின்சார பிவிசி குழாய்களைப் பதித்து எடுத்துச் செல்லலாம்.
Q: எந்த டிஎம்டி பார்களை எதற்கு பயன்படுத்தவேண்டும்? சார் ! நாங்கள் ஜி + 2 கட்டுமானம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறோம். சந்தையில் சிடிடி ரீ-பார்கள், டிஎம்டி பார்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.நாங்கள் எதைப் பயன்படுத்த வேண்டும்? ஏன்? - ஸ்டானிஸ்லைஸ் டேனியல் , அம்பத்தூர்.
சந்தையில் கிடைக்கும் குளிர் முறுக்குக் கம்பிகள் (Cold Twisted Deformed bars - CTD) காங்கிரீட் உறுப்புகளில் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும். ஏனென்றால், CTD கம்பிகளைப் பயன்படுத்திய காங்கிரீட் உறுப்புகளில் - (பலகம், விட்டம் மற்றும் தூண்கள்) விரைவில் (5 ஆண்டுகளுக்குள்ளே) துருப்பிடித்து இவ்வுறுப்புகளை வலுவிழக்கச் செய்கின்றன. குளிர் முறுக்கலின் போது வெளிப்புற புடைப்புகளில் (outer surface ribs) நுண்ணிய விரிசல்கள் ஏற்பட்டு காற்றிலுள்ள மற்றும் தண்ணீரிலுள்ள உயிர் வளியை (Oxygen) உறிஞ்சி துரு பிடிப்பு நிகழ்கிறது. எனவே தான், CTD உறுதியூட்டிக் கம்பிகளைப் பயன்படுத்தக்கூடாது.
மாறாக TMT (Thermo Mechanically Treated) உறுதியூட்டிகளின் மேற்பரப்பில் (due to Quenching process) நுண்ணிய விரிசல்களும் -அதன் காராணமாகத் துருப்பிடித்தலும் நடப்பதில்லை. எனவே TMT கம்பிகளைப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.
Q: சார் நான் ஒரு பில்டர். 2350 ச.அடியில் ஆறு கிச்சன் கொண்ட ஜி + 3 புராஜெக்ட் கட்ட திட்டமிட்டேன். தரை தளம் ( 6 x 2) 12 கார் பார்கிங்க். மூன்று அடுக்கில் தலா இரண்டு வீடுகள் . இது தான் என் பிளான்.. ஆனால் பொறியாளர் வந்து மூன்றாவது அடுக்கில் ஒரு வீட்டை கட்டி மீதி இடத்தை காலியாக விட வேண்டும் என்கிறார். இப்படி செய்தால் 5 வீடுகள் தான் கட்ட முடியும். எனவே, தரை தளத்தில் கார் பார்கிங்க் இடத்தை குறைத்து ஒரு வீட்டை கட்டி கூடுதலாக தாருங்கள் என்றால் முடியாது என்கிறார். நீங்கள் சொல்லுங்கள் 2350 ச.அடியில் தரை தளத்தில் வீட்டை கட்ட முடியாதா? கட்டினால் அப்ரூவல் கிடைக்காதா? புராஜக்ட் அணுகு சாலை அகலம் 30 அடி, ஆகும். அமைந்துள்ள இடம் : செங்குன்றம். - சந்தானம், பில்டர்.செங்கல்பட்டு
கட்டுநர் திரு. சந்தானம் அவர்களே, நீங்கள் கட்டுமானத் துறையில் இருப்பதால் உங்களுடைய மனைப் பரப்பளவிற்கு ஏற்ப அதிலிருந்து (1.75 மடங்கும் - 30 அடி அகலமுள்ள அணுகுசாலை அல்லது 2 மடங்கு - 40 அடி அகலமுடைய அணுகு சாலை வரை தான்). மொத்தப் பரப்பளவு உடைய வீடுகளைக் கட்ட முடியும்.
எனவே, இந்த கணக்கீட்டின்படி உங்களுடைய மூன்றாவது மாடியில் ஒரு குடியிருப்பு மட்டும் கட்டுவதற்கு மட்டும் தான் குடழழச ளுpயஉந ஐனெநஒ அனுமதிக்கிறது. எனவே தான் உங்களுடைய பொறியாளர் அவ்வாறு தெரிவிக்கிறார். நீங்கள் 2350 சதுர அடியில் தரைத்தளத்தில் ஒரு குடியிருப்பை கட்டினால் மூன்றாவது மாடியில் உள்ள வீட்டைக் கட்டமுடியாது. எனவே, உங்களுடைய பொறியாளர் சொல்வது போல கட்டினால் தான் நகராட்சியின் ஒப்புதல் கிடைக்கும்.
Q: சார் . நான் எஞ்ஜினியர் வைத்து தான் வீடு கட்டினேன். வழக்கமாக வீடு கட்டி முடித்த பின்பு சிறு சிறு விரிசல்களும், வெடிப்புகளும் சுவரின் ஒரு பக்கம் ஏற்படுவது இயற்கை தான்.. ஆனால் எங்கள் வீட்டின் மொட்டை மாடி தடுப்பு சுற்று சுவரில் சுவரின் அகலம் முழுக்க (முக்கால் அடியும்) 1 செ.மீ அளவில் இரண்டாய் பிளந்து மேலிருந்து கீழாக 2 அடி நீளத்திற்கும் இருக்கிறது.இந்த வகை கட்டட சேதம் எதனால் ஏற்படுகிறது? எப்படி சரிசெய்வது? கட்டடத்தின் வயது எட்டு ஆண்டுகள். ஆகிறது.. - சம்பந்த உடையார்.,. ஜவுளிக்கடை வியாபாரம். கவரப்பேட்டை
கவரப்பேட்டை திரு. சம்பந்தம் அவர்களே. உங்களுடைய வீட்டைப் பற்றி முழுமையான தகவல்கள் தரப்படவில்லை. இந்தக் கட்டடம் பாரம் தாங்கும் செங்கல் சுவர்களைக் கொண்டதா அல்லது உறுதிபெறு கான்கிரீட்டால் ஆன பலகம், விட்டம் மற்றும் தூண்கள் உடைய சட்ட கோப்பு அமைப்பா? நீங்கள் சொல்வதிலிருந்து சாதராண சுட்ட செங்கற்கள் (Burnt Clay Bricks) சிமெண்ட் கலவை 1:5 / 1: 6 உள்ள செங்கல் கட்டுவேலையாகச் செய்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.
உங்களுடைய மொட்டை மாடி கைப்பிடிச் சுவரில் விரிசல்கள் இருப்பதைக் கண்டு பயப்படாதீர்கள். மொட்டை மாடி கைப்பிடிச் சுவர்கள் கீழே பிடிப்போடும் மேலே எந்தவிதப் பிடிப்புமின்றி கட்டப்பட்டவை இப்படியிருக்கும் செங்கல் சுவர் இழுவிசை (Tension) தாங்காது. இயற்கையாகவே ஏற்படும அதிர்வுகளாலும், லாரி போன்ற ஊர்திகளின் ஓட்டத்தால் ஏற்படும் அதிர்வுகளாலும் கைப்பிடிச் சுவரில் விரிசல்கள் ஏற்படுகின்றன. எனவே, Cera Poly Crack Filler எனும் வேதியில் கலவையை அல்லது Polymer Mortar-யைக் கொண்டு அந்த விரிசல்களை அடையுங்கள். மேலும், விவரங்களுக்கு உங்களுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு கட்டுமான பொறியாளரைத் தொடர்பு கொண்டு அவரிடம் விளக்கம் பெறுங்கள்.
Q: கான்கிரீட் வலிமையாக்க நீங்கள் அவ்வப்போது பலவித அட் மிக்சர்களை எங்களுக்கு பரிந்துரைக்கிறீர்கள். ஆனால் சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தை அணுகி கேட்டால், அப்படியெல்லாம் செலவழித்து காசை வீணாக்காதீர்கள். எங்கள் நிறுவன சிமெண்டை பயன்படுத்தினால் நீங்கள் எந்த வித அட் மிக்சர்களையும் பயன்படுத்த தேவையில்லை என்கிறார்களே? - பொறி.கு.கணேஷ்., ஆவடி
கான்கிரீட்டைப் பல்வேறு பயன்பாட்டுக்காக வேதியல் சேர்மானங்களை (Chemical Admixtures - Superplasticiser, Waterproofing, Bonding Agents & Corrosion inhabitors) முதலியவற்றைக் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறோம். இவற்றினுடைய பயன்பாடுகள் பற்றி பல கட்டுநர்களுக்கும், பொறியாளர்களுக்கும் இன்னும் முழுமையாக தெரியவில்லை.
சிமெண்ட் தயாரிப்பு நிறுவனத்தில் இருப்பவர்கள் தகுதியும், திறமையும் பெற்ற கட்டுமானப் பொறியாளர்கள் அல்ல. அவர்களுக்கு சிமெண்ட்டைக் கூடுதல் விலைக்கு விற்பதே நோக்கமாக இருக்கிறது. மேலும், வேதியியல் சேர்மானங்களினால் கிடைக்கும் நன்மைகள் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. இதுதான் உண்மை நிலை. கான்கிரீட்டில் நல்ல பயன்களை பெற வேதியியல் சேர்மானங்கள் சேர்ப்பது காசை வீணடிப்பது அல்ல. செலவை விட கூடுதல் பயன்கள் கிடைக்கும். பல ஆண்டுகளுக்கு வலிமையோடும், உறுதியோடும் கட்டடங்கள் நிலைத்து நிற்க வேதியியல் சேர்மானங்களின் பயன்பாடு மிக மிகத் தேவை. எனவே, சிமெண்ட் தயாரிப்பு நிறுவனங்கள் சொல்வதைப் புறந்தள்ளுங்கள்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|