Q: காம்பவுண்ட் சுவர், பால்கனி சுவர் போலவே மொட்டை மாடி தளங்களில் பேராபட் சுவருக்கும், கைப்பிடி சுவருக்கும் தனியே வரையறுக்கப்பட்ட வடிவமைப்பு கட்டுமான முறைகள் உள்ளனவா., எனக்கு புரியும்படி குறிப்புகள் சொல்ல முடியுமா? நாங்கள் எங்களுக்கு தெரிந்த பழங்கால முறையில் தான் கட்டி வருகிறோம்.
சகாதேவன் , கட்டட காண்ட்ராக்டர், காஞ்சி
Answer:
சுற்றுச் சுவர், பால்கனி போலவே - மொட்டை மாடி தளங்களில் கைப்பிடிச் சுவர் கட்டவும் தனியே வரையறுக்கப்பட்ட கட்டுமான முறைகள் உள்ளன. இவற்றை SP 20 (S&T):1991 Hand Book on Masonry Design and Construction, IS 1905:1987 Code of Practice for Structural Use of Unreinforced Masonry ஆகிய நூல்களை வாங்கிப் படியுங்கள். தெரிந்த திறமையான கட்டுமானப் பொறியாளரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
-------------------------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: அய்யா., நான் கட்டித்தரும் வீட்டிற்கு பயோ செப்டிக் டேங்கினை பொருத்த சொல்கிறார் வீட்டு உரிமையாளர். பராமரிப்பு தேவைப்படாத அந்த பயோ செப்டிக் டேங்கினை நான் இதுவரை எந்த புராஜெக்டிலும் பயன்படுத்தியதே இல்லை. 4 பேருக்கான அந்த வீட்டிற்கு வழக்கமான முறையில் காசு சிக்கனமான செப்டிக் டேங்கையே பொருத்துவது சரியில்லையா? பொறி.சிவபாலன்., வந்தவாசி.
Answer:
வீட்டு உரிமையாளர் கேட்பதைப் போல அவர் வீட்டு உபயோகத்திற்கு பயோ செப்டிக் டேங்க் பொருத்துவது நல்ல பொறியாளருக்கு அழகு. பயோ செப்டிக் டேங்க் கூடுதலாக இருந்தாலும் பராமரிப்புச் செலவு இல்லாதது. மேலும் கழிவு நீரைச் சுத்தம் செய்து கெட்ட வாடையில்லாப் பாசன நீராக மாற்றுகிறது. சுற்றுச் சூழலை மேம்படுத்துவது. நீடித்து உழைப்பது.
நீங்கள் இத்தகைய பயோ செப்டிக் டேங்க் இனி வேறு எங்கும் பொருத்தவில்லை என்பதற்காகஇ உங்கள் அறியாமையின் காரணமாக வீட்டு உரிமையாளரைத் தண்டிக்காதீர்கள். எந்தப் புதிய பொருளையும் பயன்படுத்திச் செயல்பாட்டுக்கு வந்தால் தான் அதனுடைய பயன்களை நாம் அறியமுடியும். மேலும் பயோ செப்டிக் டேங்கின் நன்மைகளை இணையதளத்தில் தேடுக.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
-----------------------------------------------------------------------
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: அய்யா. நான் 800 சதுர அடி மனையில் வீடு கட்டி வருகிறேன்.தண்ணீர் தேங்காத அப்பகுதியில் சாலை மட்டத்திலிருந்து 2 அடி உயரமாக கட்டினாலே போதுமானது. ஆனால் என் பொறியாளர் 5 அடி பேஸ்மட்டம் போட வேண்டும் என்கிறார். இதனால் வேலையும், மண் தேவையும், படிக்கட்டு அமைத்தலும் என் செலவு அதிகமாகிறது. பொறியாளரை வைத்து வீடு கட்டினாலே செலவு தான் என்றாகி விடுகிறது.
எந்தப் பகுதியில் கட்டப்படும் வீட்டிற்கு எத்தனை அடி உயரம் பேஸ்மட்டம் போட வேன்டும் என ஏதேனும் வரைமுறை இருக்கிறதா? விளக்கவும், ஆர். தயானந்தன், மர ஆச்சாரி, பொத்தூர்.
Answer:
திரு.தயானந்தம் அவர்களே, பொறியாளரை வைத்து வீடு கட்டினால் செலவு கூடும் என்ற தங்கள் கருத்து சரியானதல்ல. 2 அடி உயரத்தில் பேஸ் மட்டம் இன்றைக்கு வீடுகட்டினால் பத்தாண்டுகளில் சாலைமட்டம் உயர்ந்து , உயர்ந்து மழைபெய்தால் மழைநீர் வடிகால் தண்ணீர் எல்லாம் உங்கள் வீட்டுக்குள் வந்துவிடும் என்பதை தெரிந்துதான் தரைமட்டத்திலிருந்து 5 அடி உயரத்தில் பேஸ் மட்டம் (Plinth Level) போட வேண்டுமென்று பொறியாளர் மிகச் சரியாக சொல்லுகிறார். இதனால் வீட்டின் கட்டு மானச் செலவு சிறிது கூடினாலும் அதுதான் வீட்டை 30 ஆண்டுகளுக்கு மேலாக முழுமையாகப் பயன்படுத்த உதவும். வீடு கட்டடப்படுமிடத்தில் உள்ள மண் தரை, (Existing Ground Level) அருகில் செல்லக்கூடிய சாலையினுடைய மேல்மட்டம், 20 ஆண்டுகளில் ஏற்படக் கூடிய சாலையின் கூடுதல் உயரம் இவற்றைப் பற்றிய தகவல்கள் எல்லாம் தெரிந்தால்தான் வீட்டினுடைய பேஸ் மட்டம் எவ்வளவு உயரத்தில் போட முடியும் என்பதைத் தீர்மானிக்க முடியும்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
---------------------------------------------------------------------------------------------
2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: சார், நான் 1200 சதுர அடி மனையில் ஜி+ 1 தளமாக 1350 ச.அடி வீடு கட்டி வருகிறேன். மண் பரிசோதனை செய்து தான் வீடு கட்டினேன். இப்போது பிரிகேஸ்ட் ஸ்லாப் முறையில் காம்பவுன்ட் சுவர் அமைக்கச் சொன்னால், கற்கள் வைத்து தான் சுற்றுச் சுவர் கட்ட வேன்டும் என்கிறார் பொறியாளர். மேலும், காம்பவுண்டுக்கு என தனியே மண் பரிசோதனை செய்ய வேண்டும் என செலவைக் கூட்டுகிறார். அவருக்கு நான் என் நிலையை எப்படி விளக்குவது? லோக் சுந்தர், வில்லிவாக்கம்.
Answer:
பில்டர்ஸ்லைன் இதழில் கேள்வி கேட்பவர்கள் தங்களைப் பற்றிய சொந்த விவரம் தரப்பட வேண்டும். அப்பொழுது தான் அவர்களின் நிலைமையை அறிந்து மிகச் சரியான பதிலைச் சொல்வதற்கு வாய்ப்பு ஏற்படும். வீடு கட்ட மண்பரிசோதனை செய்திருந்தால் அதில் 5 அடி/8அடி/12 அடியில் என்ன வகையான மண் கிடைத்தது என்பது தெரிய வேண்டும்.
எங்களுக்குத் தெரிந்து வில்லிவாக்கத்தில் களிமண்ணும் சிறிது மணல் கலந்த களிமண்ணும் கிடைக்கிறது. உங்கள் வீட்டுக்கு என்ன வகையான அடித்தளம் அமைத்தீர்கள்? என்று தெரியப்படுத்தவில்லை. சுற்றுச்சுவர் கட்டுவதற்கு என்று தனியாக மண்பரிசோதனை செய்ய வேண்டிய அவசிய மில்லை. வீடு கட்ட செய்த மண்பரிசோதனையே போதுமானது.
தாங்கள் கூறுவது போல முன்வார்த்த கான்கீரிட் பலகம் கொண்டு சுற்றுச்சுவர் தாராளமாக அமைக்கலாம். ஆனால் சுற்றுச்சுவரில் இடையேயுள்ள கான்கீரிட் தூண்களுக்கு கீழே அடிபெருத்த குத்துத்தூண் (SURP) அடித்தளம் போட வேண்டும். இல்லாவிடில் 4/5 ஆண்டுகளில் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
------------------------------------------------------------------------
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.
Q: அய்யா வணக்கம் !
எனக்கு மதுரவாயல் - துறைமுக பறக்கும் பாலம் பற்றி புரியாத விrயம் பற்றி உங்களிடம் கேட்கவேண்டும்.
10 ஆண்டுகளாக கட்டப்படாமல் கைவிடப்பட்ட அப்பாலத்தை, இப்பொது ஈரடுக்கு பாலமாக கட்டப் போகிறார்களாம். அது உண்மையில் சாத்தியமானதா? ஏனெனில் இதற்கு முன் கட்டப்பட்டு, கைவிடப்பட்ட தூண்கள் மீது தான் புதிய பாலம் வரப்போகிறது. அப்படியயனில் கூடுதல் எடையை அத்தூண்கள் சுமக்கும் வண்ணம் கட்டப்படுவது ஏற்புடையயதா? எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அப்படி கட்டக்கூடாது,பழைய வடிவமைப்பே சரி என சொல்கிறார். அரசு ஈரடுக்கு பாலம் தான் கட்டுவோம் என்கிறது. அனுபவ அரசு பொறியாளர்கள் உங்கள் கருத்து என்ன?
Answer:
பொறி. ராம்குமார் அவர்கள், நீங்கள் ஒரு கட்டுமானப் பொறியாளராக இருக்கும்பட்சத்தில் - 10 ஆண்டுகளாக கட்டப்படாமல் கைவிடப்பட்ட சென்னை - மதுரவாயல் துறைமுக பறக்கும் பாலம் வேண்டுமென்றே அரசியல் காழ்புணர்ச்சியில் பழைய தமிழ்நாடு அரசால் நிறுத்தப்பட்டது பொறியியல் கராணங்களுக்காக அல்ல.
கைவிடப்பட்ட பாலத்தை இப்பொழுது 2 அடுக்கு பாலமாகக் கட்டப் போகிறார்கள் என்று செய்திகள் வெளியிடப்படுகின்றன. கட்டுமானப் பொறியியலில் இப்படிப்பட்ட மாற்றங்களை எளிதாகவும் இயல்பாகவும் கூடுதல் எடையைத் தாங்கும் வண்ணம் கட்டமுடியும் என்பதே பொறியியல் நிலைப்பாடு. சிறந்த அனுபலமும் பொறியியல் திறமையும் கட்டுமான வடிவமைப்பும் தெரிந்த யாரிடமும் கேட்டாலும் 2 அடுக்கு பாலத்தை புதிய மாற்றங்களோடு செய்ய முடியும் என்று கூறுவர். என்னுடைய கருத்தும் அதுதான். அரசியல்வாதிகள் சொல்லும் கருத்துகளைப் புறந்தள்ளுங்கள்.
பதிலளித்தவர் : மூத்த பொறியாளர் திரு. அ.வீரப்பன்
பில்டர்ஸ் லைன் டிசம்பர் 2020 இதழிலிருந்து..
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|