Q: சார் நான் என் சிவில் அறிவை தங்கள் பதில்கள் மூலம் மேம்படுத்தி வருகிறேன். 6 ஆண்டுகள் சைட் சூப்பர் வைசராக இருந்து சமீபத்தில் புராஜெக்ட் பொறியாளராக பணி ஏற்க இருக்கிறேன். ஒரு நல்ல திட்டப் பொறியாளரின் தகுதி மற்றும் கடமைகள் என்ன? என்பதை தாங்கள் கூற வேண்டுகிறேன். பொறி. வினீத், மதுராந்தகம்
தள மேற்பார்வையாளராக பதவி உயர்வு பெற்றுள்ள திரு. வினித் அவர்களுக்கு எங்களின் நல்வாழ்த்துகள். திட்டப் பொறியாளராக பணி செய்ய இருக்கும் உங்களுக்கு புதியனவற்றைக் கற்றுக் கொள்ளும் தணியாத ஆர்வம், திட்ட வேலையில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை ஒருங்கிணைக்கும் திறமை மற்றும் திட்ட வேலைகளைத் தரத்தோடு கால அட்டவணைப்படி முடிக்கும் திட்ட மேலாண்மையும் தங்களுக்குத் தேவை.
உங்களின் மேலுள்ள மற்றும் கீழுள்ள சக தோழர்களிடமிருந்து ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். களப் பணியில் அவர்களோடு பழகிக் குறைகளைக் கேட்டு அவற்றைப் போக்கிட முயற்சி செய்ய வேண்டும். உங்களை பணியில் அமர்த்தியுள்ள நிறுவனத்தாருக்கும் உடன் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உண்மையாக உழைத்து உயரவேண்டும்.
Q: வீடுகளுக்கு யூபிவிசி ஜன்னல்கள் போடலாம் என்கிறார்கள். ஆனால், எனக்கோ மர ஜன்னல்கள் மீது தான் பிரியம். மேலும், ரீ சேல் வேல்யூ, யூபிவிசி ஜன்னல்களுக்கு இல்லை என்பது என் கருத்து. உங்கள் சிபாரிசு என்ன? - சங்கமேஸ்வர அய்யங்கார், திருவான்மியூர், புரோகிதம்
சாதாரண வீடுகளுக்கு UPVC சன்னல்கள் போடுவது செலவை மிகுதியாக்கும். எனவே குடியிருப்பு வீடுகளுக்கு மரச் சன்னல்கள் போட்டால் போதுமானது. பெரிய அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் இவற்றிற்கு UPVC போடலாம்.
Q: கான்கிரீட் கலவையில் எம் 10 முதல் எம் 25 வரை பல கான்கிரீட்டுகள் உள்ளன என்கிறார்கள். கலவை விகிதப்படி இப்படி வேறுபடுகிறதா? அல்லது சிமென்ட் தரத்தின் அடிப் படையில் வேறுபடுகிறதா? நான் கட்டும் ஜி+ 1 கட்டுமானத்திற்கு எந்த வகை கலவையை பயன்படுத்த வேண்டும்? எந்தெந்த இடங்களுக்கு, பணிகளுக்கு எந்த கலவை தயார் செய்ய வேண்டும்? - பொற்கைபாண்டியன், லேத் பட்டறை உரிமையாளர், மதுரை
கான்கிரீட் கலவைகளில் தரம் M10 லிருந்து M80 வரை பல்வேறு வகையான கான்கிரிட் கலவைகள் இருக்கின்றன. இவையயல்லாம் கான்கிரீட் உருவாக்கும் சிமெண்ட், கருங்கல் சல்லிகள், மணல் மற்றும் தண்ணீர் கலவை விகிதப்படி மாறுபடுகிறது. நீங்கள் கட்டும் G+1 கட்டுமானத்திற்கு மிகக் குறைந்தது M20 கான்கிரீட் தரத்தைப் பயன்படுத்த வேண்டும். கடற்கரை ஓரங்களிலிருந்தால் கான்கிரீட் தரம் M30 முதல் M40 வரை பயன்படுத்த வேண்டும். உங்கள் ஊர் உட்புறத்தில் இருப்பதால் கான்கிரீட் தரம் M20 கலவை போதுமானது.
Q: நாங்கள் கட்டும் வீட்டிற்கு படிகட்டுகளுக்கு சிமென்ட் காரையிலான கைப்பிடிச் சுவர் வைக்க விரும்பு கிறோம். அது வீட்டின் வெளியிலிருந்து மொட்டை மாடிக்குச் செல்லும் படிக்கட்டு வழியாகும். ஆனால், நமது கண்ட்ராக்டர் கிரில் கம்பிகளை வைக்க சொல்கிறார். எதை நான் தேர்வு செய்வது? ஏன்? - ஆறுமுகச்சாமி. ஹோட்டல் ஊழியர், ராஜபாளையம்,
நீங்கள் கட்டும் வீட்டுப் படிக்கட்டுகளுக்கு சிமெண்ட் காரையினாலான கைப்பிடிச்சுவர் வைக்கக் கூடாது. இந்த கைப்பிடிச் சுவரில் வலிமையும் இல்லை; உறுதியும் இல்லை. காலப்போக்கில் விரிசல்கள் விழுந்து உடைந்து போக வாய்ப்புண்டு. எனவே உங்களின் ஒப்பந்தகாரர் சொல்வதைப் போல மெல்லெஃகு கிரில் கம்பிகளை வைத்து கட்டுங்கள். வலிமையுடனும் உறுதியுடனும் நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
Q: அய்யா! என் வீடு 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. ஆர்.சி.சி கட்டமைப்பு தான். 800 ச. அடி வீடு அது. G+ 1 கட்டுமானம் அது. சுற்றிலும் 2 மீட்டரும் பின் பகுதி மட்டும் அரை மீ இடைவெளி விட்டு கட்டினோம். அப்போது பின்மனை காலி மனையாக இருந்தது. பின் பக்கம் பில்லர் அமைக்கும் போது ஒரு மீ நீளத்தில் கம்பி நீட்டிக்கப்பட்டு அப்படியே விடப்பட்டது. இப்போது வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் கம்பியை பின் மனையின் சொந்தக்காரர் வெட்டி எடுக்க சொல்கிறார். (அவர்கள் வீடு கட்ட ஆயத்தமாக உள்ளனர்) இதை நாங்களே ராட் கட்டர் வைத்து வெட்டி விடலாமா? அல்லது கம்பியை வர்ணம் தீட்டி, மடக்கி வைத்து காபந்து செய்ய வேண்டுமா? இது போல் ஏன் கம்பிகளை நீட்டி விடுகிறார்கள். எல்லா கட்டுமானங்களிலும் இது போல் தான் செய்வார்களா? - திரு. தினகரன், ஓய்வு பெற்ற தபால் ஊழியர், மணவாளன் நகர் , திருவள்ளூர்
சட்டக்கோப்பு கட்டடங்களில் தூண்களிலும் விட்டங்களிலும் Development Length வேண்டும் என்பதற்காக எஃகு உறுதியூட்டிகளை 1 மீட்டர் நீளத்திற்கு / உயரத்திற்கு நீட்டி விடுவார்கள். இது ஒரு பழைய கால தொழில்நுட்ப முறை. நீங்கள் தூண்களிலிருந்து நீட்டிக் கொண்டுள்ள உறுதியூட்டிகளை உங்கள் பகுதியில் வளைத்து அதன் மீது துரு எதிர்ப்பு வேதியியல் சேர்மானத்தை பூசி விடலாம் அல்லது 1/2 அடி உயரத்திற்கு கம்பியை விட்டு மீதி கம்பிகளை வெட்டி விடலாம்.
நீங்கள் மேலே கட்டடம் கட்டும்போது மேலிருந்து வரும் புதிய கம்பிகளை 1/2 அடி உயரத்திற்குள்ள பழைய கம்பிகளோடு பற்றவைப்பு (Fillet Welding) மூலம் ஒட்டிவிடலாம். இது புதிய முறை. செலவும் அதிகமாகாது. கம்பிகளும் துருப்பிடித்து இற்றுப் போகாது. நீங்கள் இதில் ஏதாவது ஒரு முறையை முயன்று பார்க்கலாம்.
Builders Line : Prompt Publication
Editor, Subramanyam
No:6, Aishwarya Nagar,
First Floor,
(Behind Chennai Health Foundation),
Thirumullaivayal,
Chennai - 600062.
Phone : 8825577291, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
185000
|