‘‘ எழுதப் படிக்கத் தெரிந்து, தொழில் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வமிருந்தால் போதும். அவர்களுக்கு கட்டுமானத் தொழிலை உதவித் தொகையுடன் கற்றுத்தருகிறோம்’’ என்கிறார், எஸ்.நடராஜன். இவர் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்-டி) கட்டுமான நிறுவனத்தின் கன்ஸ்ட்ரக்ஷன் ஸ்கில்ஸ் டிரைனிங் இன்ஸ்டிடியூட் (சி.எஸ்.டி.ஐ) தலைவர்.
‘‘விவசாயத்தை அடுத்து கட்டுமானத்துறையில்தான் வேலைவாய்ப்பு அதிகம். தற்போதைய நிலையில் மூன்று கோடி தொழிலாளர்களுக்கும் மேலாக தேவை இருக்கிறது. ஆனால், அந்த அளவுக்கு பணியாளர்கள் இல்லாத நிலைதான் இருக்கிறது. ஹட்கோ புள்ளி விவரப்படி, இந்தியாவில் உள்ள கட்டுமானத் தொழிலாளர்களில் ஒரு சதவிகிதம்கூட முறையாகப் பயிற்சி பெற்றவர்கள் இல்லை என்பது வருந்தத்தக்க விஷயம். இதைக் கருத்தில்கொண்டுதான், 10 ஆண்டுகளுக்கு முன் சி.எஸ்.டி.ஐ பயிற்சி மையத்தை சென்னையில் உருவாக்கினோம். இப்போது இந்தியா வில் ஆறு இடங்களில் பயிற்சி அளித்து வருகிறோம்’’ என்ற நடராஜன் பயிற்சி முறை பற்றி விவரித்தார்.
‘‘இளைஞர்களுக்கு, குறிப்பாகக் கிராமங்களில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் இருப்பவர்களுக்கு இன்டர்வியூ நடத்தித் தேர்வு செய்து, அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தகுதிவாய்ந்த பணியாளர்களாக மாற்றுகிறோம். எலக்ட்ரீஷியன், பிளம்பர், மேசன், சட்டரிங் கார்பென்டர், கம்பி கட்டுபவர், சாரம் அமைப்பவர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி அளிக்கிறோம். இதில், சாரம் அமைத்தல் மட்டும் ஒரு மாத குறுகிய காலப் பயிற்சியாகும். மற்றவை மூன்று மாத பயிற்சி. பிளம்பர் பயிற்சியில் சேர பத்தாம் வகுப்பும், எலக்ட்ரீஷியன் பயிற்சிக்கு ஐ.டி.ஐ எலக்ட்ரீஷியன் (என்.சி.வி.டி) கோர்ஸும் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். இதர பயிற்சியில் எழுதப் படிக்க தெரிந்தவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பயிற்சி களில் சேர 18-25 வயது இருக்கவேண்டும்’’ என்றார்.
பயிற்சிக் காலத்தில் இலவச தங்குமிடம் மற்றும் மாதம் ரூபாய் 2,000 உதவித் தொகை தரப்படுகிறது. அடிப்படையில் தொடங்கி, இன்ஜினீயர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது வரை கற்றுத் தருகிறார்கள்.
‘‘இந்தப் பயிற்சியின் முடிவில் எங்கள் நிறுவனத்திலேயே சேர்ந்து மாதம் 4,000 முதல் 5,000 ரூபாய்வரை பெறலாம். எங்களிடம்தான் வேலை பார்க்கவேண்டும் என்றில்லை. வெளி நாட்டுக்குச் சென்றால், மாதம் குறைந்தது 15-25 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கமுடியும். சப்-கான்ட்ராக்டராகி நிலையில் சுய வேலை வாய்ப்பையும் பெறமுடியும்.
இந்த ஆண்டில் 2,500 பேருக்கு பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இந்த எண்ணிக் கையை அடுத்த ஆண்டில் 8,000 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம். சுய உதவிக் குழுக்கள், என்.ஜி.ஓ-க்கள் ஆர்வமிக்க மாணவர்களை அனுப்பிவைக்கலாம். மேலும் ஒரே கிராமத்திலிருந்து 50 பேருக்கு மேல் இப்பயிற்சியில் சேர விரும்பினால், அந்தக் கிராமத்துக்கே சென்று தேர்வு செய்கிறோம். ஓரளவு படித்த, கிராமப் புற இளைஞர்களுக்கு இது அருமையான வாய்ப்பு’’ என்கிறார் நடராஜன்.
தகுதியானவர்கள், ஆர்வமுள்ளவர்கள் இப்பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாமே...!
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2146716
|