ஆற்றுமணலை விட்டு விடுங்கள் ஆறுகளை வாழவிடுங்கள்! தீர்ப்பு நம்மைத் திருத்துமா?
03 டிசம்பர் 2020   02:21 PM



சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரைக் கிளை 28-11- 2017 அன்று ஆற்று மணல் அள்ளலைத் தடுத்திட நல்ல தீர்ப்பினை அளித்துள்ளது.
. தமிழ்நாட்டு ஆறுகளிலிருந்து ஆற்றுமணல் அள்ள அமைக்கப்பட்ட மணல் குவாரிகளை 6 மாதங்களுக்குள் மூடிவிட வேண்டும்.

. இனி தமிழக அரசு, ஆறுகளிலிருந்து மணல் அள்ள புதிதாகக் குவாரிகளைத் திறக்க கூடாது.
.வெளிநாடுகளிலிருந்து (மலேசியா, கம்போடியா, பிலிப்பைன்ஸ்) ஆற்று மணலை இறக்குமதி செய்திட தமிழக அரசு ஏற்பாடு செய்திட வேண்டும்.
. ஆற்றுமணலுக்கு மாற்றாக உள்ள செயற்கை மணலின் (எம்சேண்ட்) பயன்பாட்டை அரசு ஊக்குவிக்க வேண்டும்.
. இத்துடன் அன்றி கருங்கல் சல்லிகளை உடைக்கும் கல் குவாரிகளைத் தவிர கிரானைட் கற்களை வெட்டி எடுக்க அனுமதி அளிக்கக் கூடாது.
இந்த தீர்ப்பு குறித்து - பெரும்பாலான ஆதரவு - சில எதிர்ப்புக் குரல் எதிரொலிக்கின்றன. இது குறித்து தமிழக அரசு தம் கருத்தினை வெளிப்படையாகக் தெரிவிக்காவிட்டாலும் இத்தீர்ப்பினை எதிர்த்து மேல் முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எதிர்ப்பு தெரிவிப்போரின் முக்கிய கருத்துகள் இவைதாம்.
1. மணல் அள்ளிச் செல்லும் தொழிலில் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 1.00 லட்சம் மணல் லாரி உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள (Unorganised) தொழிலாளர்கள் 10 லட்சம் பேர் வேலையிழப்பார்கள்.


2. கட்டுமானத் துறையைச் சேர்ந்தோரின் அங்கலாய்ப்புகள்:.மாற்றுமணல் எனப்படும் செயற்கை மணல் (M-Sand) எல்லாவிடங்களிலும் போதுமான அளவில் கிடைக்கவில்லை. அதனின் விலையும் கூடுதலாக இருக்கிறது. மேலும் இந்த செயற்கை மணலிலும் கலப்படம் இருக்கிறது. எனவே நம்பி வாங்கிப் பயன்படுத்தமுடியவில்லை.


.இதைத் தவிர மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்த மணலும் தரமானதாக (As per BIS Standards) இல்லை. சுத்தமற்ற மினரல் துகள்கள் அளவுக்கதிமாகக் கலந்துள்ளன.


இவற்றிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
. ஆற்றுமணல் அள்ளுவது - அளவுக்கு மீறி அள்ளியது - தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக நிலத்தடி நீரை வற்றச் செய்து குடி நீரைக் கெடுத்தமை - சுற்றுச் சூழலை மாசடையச் செய்தமை - வளமிக்க ஆறுகளை வறண்டு போகச் செய்தமை முதலியவை - இவர்களுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. உறைக்கவில்லை. 


தமிழ் நாட்டில் ஆற்றுமணல் அள்ளலின் வரலாறு என்ன சொல்கிறது?
. கட்டுமானத் தொழில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகவே நடக்கிறது. 1980 - 1990 ஆண்டுகளில் கட்டுமானங்களின் எண்ணிக்கை மிகுதியானது. 2000 ஆண்டுகளில் தேவையின் அடிப்படையில் - வெளிமாநிலக் கட்டுமானங்களுக்கும் சேர்த்து - ஆற்றுமணலின் தேவை மிக மிக அதிகரித்தது. 1-10-2003 இல் தமிழக அரசு ஆற்றுமணலை அள்ளிவிற்கும் வியாபாரத்தில் ஈடுப்பட்டபின்பு எந்தவித விதிமுறைகளும் கட்டுப்பாடுமின்றி மிக மோசமாக 1 மீட்டர் ஆழத்திற்கு மேலாக 10 மீட்டர்/ 15 மீட்டர் ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டது.

பெயருக்குப் பொதுப்பணித்துறை மணலை அள்ளி விற்பதாக என்று சொல்லிக் கொண்டு - அரசியல்வாதிகளின் முகவர்கள் - இரண்டாம் நிலை விற்பனையாளர்கள் - இடைத்தரகர்கள் எனப் பலரும் இத்தொழிலில் ஊடுருவினர். 


. சமூக ஆர்வலர்கள் - சமுதாயச் செயற்பாட்டாளர்கள் - திரு நல்ல கண்ணு போன்றவர்தம் உயர்நீதிமன்ற நடவடிக்கைகளால் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டது. காவிரி. கொள்ளிடம், பாலாறு போன்ற ஆறுகளிலும் சிற்றூர்ப் பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் - உயர்நீதிமன்ற அரைகுறை அறிவுறுத்தல்களால் ஒரு சிறிய தடுக்கப்பட்டது.

காலம் செல்லச் செல்ல எதிர்ப்பு பெரிதானது. ஆற்று மணலுக்கு மாற்றாக - செயற்கை மணல் (எம் - சேண்ட்) முன்னிறுத்தப்பட்டது.  எங்களைப் போன்ற கட்டுமான வல்லுநர்கள் - மாற்று மணலாக - கருங்கல் உடைதூள் (Stone Crusher Dust - மலைமாவு) மற்றும் முதலியவற்றையும் பகுதி மாற்றமாகவும் முழு (100%) அளவு மாற்றமாகவும் விளக்கி இவற்றின் மேம்பட்ட தரத்தையும் கூடுதல் வலிமை - உறுதியையும் தெரிவித்தோம். இவை 10 % அளவுக்குக் கூட நடைமுறைக்கு வரவில்லை.


. ஊர்ப் பொதுமக்கள், விவசாயிகள் சமுதாய ஆர்வலர்கள் என எத்தனை பேர் புகார் கொடுத்தாலும்  போராட்டங்கள், சாலை மறியல் - மணல் லாரிகள் சிறைபிடிப்பு எனச் செய்தாலும் - முறைகேடாக விதி முறைகளை மீறி - அனுமதியற்ற குவாரிகளில் திருட்டுத் தனமாக மணலை அள்ளினாலும் அரசாங்கம் கண்டு கொள்வதே இல்லை; அரசு அலுலர்கள் - மாவட்ட ஆட்சியர் உட்பட - ஆற்றுமணல் அள்ளும் கொள்ளைக்கு நேரிடையாக ஆதரவளிப்பவர்களாகவே செயல்பட்டனர் என்பது வேதனையான நிகழ்வு நிலவளத்தையும் நீர்வளத்தையும் காப்பதற்காகவே கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நீர்வள ஆதாரத்திட்டத்தையும் நீர்வள நில வளத்திட்டத்தையும் நிறைவேற்றும் பொதுப்பணித்துறைப் பொறியாளர்களே - அரசாங்கத்திற்குப் பயந்து கொண்டு - மிக நல்ல பிள்ளைகளாக நடந்து கொண்டதை வரலாறும் மக்களும் எந்தக் காலத்திலும் மன்னிக்கமாட்டார்கள்.

வாங்கும் ஊதியத்திற்கு வஞ்சனை செய்யாது கடமையாற்ற வேண்டிய உயர் அதிகாரிகளே - தெரிந்தே ஆற்று மணல் அள்ளி கொள்ளையடித்ததை எங்கு சென்று முறையிடுவது? வெறும் தரகுபெறும் முகவர்களாக - பொறுப்பற்ற வர்களாக - மன சாட்சியை விற்றவர்களாக அரசு அதிகாரிகளை மாற்றிய தமிழக அரசை எவ்வளவு கண்டித்தாலும் தகும். கடந்த 25 ஆண்டுகளாக - குஷீப்பாக கடந்த 15 ஆண்டுகளில் எல்லா ஆறுகளையும் மொட்டையடித்து கட்டாந்தரைகளாக ஆக்கியதை எவ்வாறு விவரிப்பது என்றே தெரியவில்ல. எனினும் தற்போது உயர் நீதிமன்றத் தீர்ப்பு - ஆபத்தில் உண்மையிலேயே உதவும் நண்பனைப் போல வந்துள்ளது. எனவே இதை மிக்க மகிழ்வோடு வரவேற்கிறோம். இதற்கும் எதிர்ப்புகள் வருகின்றனவே. எதிர் கருத்துகள் உண்மையானவையா?

உரிய பதில்கள்:
. எந்த தொழிலை (மணல் அள்ளுவதை) உடனே தடுத்தாலும் - அதனால் பிழைப்பவர்கள் பாதிக்கப்படவே செய்வார்கள். ஆறு மாதகால அவகாசம் கொடுத்திருப்பதால் -  அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேறு தொழில்களுக்கு மாறிக் கொள்ளவே வேண்டும்.


. மணல் அடித்த லாரிகள் - வேறு சரக்குகளை ஏற்றிச் செல்லத்தான் வேண்டும். செயற்கை மணலை - கருங்கல் உடைதூளை ஏற்றிச் செல்ல லாரிகள் தேவை அவற்றிற்கு அவைகள் பயன்படும். அவைதம் தொழில் எந்தவகையிலும் பாதிக்காது.


. ஆற்று மணல் இல்லாவிட்டால் - கட்டுமான வேலைகள் எல்லாம் ஒன்றும் அப்படியே நின்றுவிடாது. மாற்று மணலான எம் சேண்டையும் கருங்கல் அடைத்தூளையும், முழுமையும் பயன்படுத்தலாம் பல வெளிநாடுகளிலும் ( மத்திய தரைக் கடல் நாடுகளில்) - சில இந்திய மாநிலங்களிலும் செயற்கை மணலைப் பயன்படுத்தி - வலிமையான உறுதியான உயரமான கட்டடங்களைக் கட்டிவருகிறார்கள்.


 மேலும் இவற்றை பயன்படுத்தி முன்வார்த்த காங்கிரீட் கட்டுகளைக் கொண்டு (Precast Concrete Blocks) தரமான கட்டடங்களை விரைவாகக் கட்டமுடியும். கட்டுமானத்துறை வேலைகளுள் பாதிக்கு மேல் (50%) அளவுக்குக் கீழ்க்கண்ட வேலைகளுக்கே தேவைப்படுகின்றது.


.அடித்தள வெட்டுக் குழிகளை நிரப்பிட. கட்டட தளமட்டத்தை 2 அடி முதல் 5 அடி வரை உயர்த்திட. வலிமை தேவைப்படாத சாதாரண அடி பரப்பு தளம் (Plain Cement Concrete) போட .. மேற்குறிப்பிட்ட வேலைகளுக்கு ஆற்று மணல் அல்லாத பிற மாற்று மணல்களை (ஏன் கலப்பட மணலையும்) தாராளமாகத் தயக்கமின்றி பயன்படுத்திட கட்டுநர்கள்/கட்டுமான மேற்பார்வையாளர்கள் முன்வர வேண்டும். இதன் வாயிலாக ஆற்று மணல் தேவையினைப் பெருமளவில் குறைத்திடலாம். தொடக்கத்தில் மனத் தடங்கல் இருந்தாலும் ஆறுமாதங்களில் எல்லாம் சரியாகி பழக்கத்திற்கு வந்துவிடும். எனவே கட்டுநர்கள் இதைப் பெரிதுபடுத்துவதில் எந்த நியாயமும் இல்லை.


இந்தச் செயற்கை மணல் / கருங்கல் உடைத்தூளில் கலப்படம் உள்ளது உன்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். மணலின் மணியளவில் (Grain Size) சிறு பகுதி - ஏன் பாதிக்குமேல் கூடுதலாக - பருவமணல் ((Coarse) இருந்தால் தரமும் வலிமையும் கூடுதலாகவே இருப்பதாகவே சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. செயற்கை மணலில் பூச்சு வேலைக் கென்றே சிறப்பு பூச்சுமணல் சந்தையில் எளிதாகக் கிடைக்கிறது. கிடைக்காதபோது சல்லடையில் சலித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். (இன்றைக்கும் ஆற்றுமணலை வேலைத்தலத்தில் சல்லடையில் சலித்தே பூச்சு வேலைகளுக்குப் பயன்படுத்துகிறோம்) குறிப்பாக மிகுநெகழி இளக்கி வேதியில் சேர்மானம் (Superplasticiser) - கலவைக்கும் காங்கிரீட்டிற்கும் மிக எளிதாகத் தண்ணீரில் கலந்து பயன்படுத்தும் போது வேலைகள் வலிமையும் உறுதியும் உடையவையாக - (ஆற்றுமணலை விட) உள்ளன என்பது சோதனைகளில் தெளிவாகத் தெரிந்துள்ளது. அத்தகைய சோதனை முடிவுகள் சில இங்கே வெளியிடப்பட்டுள்ளன.


. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் மணல் -  சிறிது பருமணலாக இருக்கிறது என்ற குற்றச் சாட்டில் பொருள் இல்லை. ஏனெனில் பருமணல் உள்ள கலவையும் காங்கிரீட்டும் கூடுதல் வலிமை உடையவையாக உள்ளதும் சோதனைகளின் மூலம் உண்மைபடுத்தப்பட்டுள்ளது.


. இவை தவிர வேறுசில மாற்றுப் பொருட்களை ஆற்று மணலுக்கு பகுதி மாற்றமாக (Partial Replacement - 10% முதல் 50% வரை) பயன்படுத்தலாம். அவையும் கூடுதல் வலிமையும் உறுதியும் உடையவையாக இருப்பது சோதனை முடிவுகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அத்தகைய பொருட்களில் சில: ஃபிளை ஆஷ் சிலிகா மணல், வார்ப்பு மணல், பளிங்குக்கல் அரைவை தூள், மரத்தூள், கர்ப்பர் சிலாக் முதலியவை.


. கிரானைட் கருங்கற்களை வெட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றதும் எவ்வளவு அர்த்த முள்ள தீர்ப்பு என்பதை மதுரை மேலூர் மேலவளவு, சிவகங்கை, தர்மபுரி, ஓசூர் பகுதிகளைப் பார்த்தவர்களுக்கு நன்கு புரியும். கொடுமையிலும் கொடுமையாக - சிற்றூர்களையும் - கண்மாய்களையும் காணாமலடித்த வேதனை வரலாறு. தமிழ்நாட்டில் இன்று எந்த ஊருக்குப் போனாலும் - பெருநகரங்கள், நகரங்கள் மற்றும் பேரூர்களிலும் கிரானைட் - மார்பிள் பலகங்கள் கொண்ட திறந்த வெளி கிட்டங்கினைக் காணலாம். ராஜஸ்தான், பஞ்சாப் பகுதிகளிலிருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு - அளவுக்கதிகமாகவே கிடைக்கின்றன. எனவே நம் தமிழ் நாட்டு மலைவளத்தை - நிலவளத்தைக் காப்பதற்கு இத்தீர்ப்பின் பகுதி பெரிதும் உதவும்.


பொருளாதார வருவாய் அளவில்...
. தமிழ்நாடு அரசு பொதுவாகவே பொருளாதார வருவாய் குறைவான மாநிலம். ஆற்றுமணலை அள்ளி விற்பதிலும் கணிசமாக ஆண்டு வருவாய் (ரூ.10000 கோடியளவில்) வருகிறது. இதற்குத் தடைபோட்டால் - போதிய வருவாயின்றி வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும் என்று புலம்பும் பொருளாதார புத்திசாலிகளும் தமிழ்நாட்டில் உண்டு. எங்கள் கண்ணோட்டத்தில் இது ஒரு சாக்குப் போக்கு, மணல் மற்றும் மது விற்பனை (டாஸ் மாக்) முழுவதுமாக நிறுத்தலில் ஏற்படும் வருவாய் இழப்பினை பல் நல்ல வழிகளில் ஈட்டலாம். அதற்கு எங்களுடைய தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியளர் சங்கம் வழி சொல்லக் காத்திருக்கிறது.
எனவே ஆற்றுமணலை விட்டு விடுங்கள். ஆறுகளை வாழ விடுங்கள்..

 

இன்னும் செய்திகள்    

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 1966508