சோலார் நிறுவ என்ன சிக்கல்? இடப்பற்றாக்குறையா?
வீட்டில் சோலார் நிறுவ பெரும்பாலோர் சொல்லும் காரணம் இடம் இல்லை என்பதுதான்.
முதலில் ஒரு சோலார் பேனலின் அளவு என்ன? என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சோலால் பேனல் என்பது ஒரே தகடு இல்லை. அது டைல் போன்ற சிறிய 60 செல்களாள் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு செல்லின் அளவு 6 க்கு 6 அங்குலமாகும். (அதாவது 15 செமீ க்கு 15 க்கு செமீ) இது போல 60 செல்களால் ஆனது தான் ஒரு பேனல். இந்த பேனலில் அளவு 3.25 அடி அகலம் 5.5 அடி நீளம் ஆகும்.
இதில் 60 செல்களுக்கு பதிலாக 72 செல்கள் மற்றும் 96,144 என செல்கள் அளவுகள் மாறு பட்டாலும் பொதுவாக வீட்டு உபயோகத்திற்கு 60 செல்கள் கொண்ட பேனல்களையே நிறுவுவார்கள்..
சரி. 1 கி.வாட் சூரிய மின்சாரத்துக்கு எத்தனை பேனல்கள் தேவைப்படும் என்றால், 4 முதல் 6 பேனல்கள் வரை பொருத்தப்படலாம் என்கிறது சோலார் நிறுவனங்கள்.
எப்படியும், 1 கிலோ வாட் சூரியமின்சாரத்தைப் பெற வேண்டுமெனில், 120 முதல் 140 ச.அடி இடம் தேவை என்பதால், மிகச்சிறிய வீட்டில் வசிப்பவர்கள், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்கும் இடம் ஒரு பிரச்சினையாக இருக்கத்தான் செய்கிறது.
‘நாங்கள் மொட்டை மாடியில் பூந்தொட்டிகளை வைத்துக் கொள்ளக்கூட வீட்டு உரிமையாளர் அனுமதிப்பதில்லை. நாங்கள் எப்படி 300 400 சதுர அடியில் சோலார் பேனல்களை அமைப்பது” என்கிறார்கள் வாடகைதாரர்கள். மேலும், அப்பார்ட்மெண்டுகளில் பொதுவாக பிளாட் உரிமையாளர்களுக்கு ஒரு நியதி, அதில் வாடகைக்கு குடியிருப்புகளுக்கு ஒரு நியதி என இரண்டு விதமான சூழ்நிலை நிலவுகிறது, அப்பார்ட்மெண்டில் வாடகைக்கு வசிப்பவர்கள் பெட் அனிமல் கூட வைத்துக் கொள்ள அனுமதி கிடையாது” என்பார்கள் சில அசோசியேஷன் நிர்வாகிகள்.
இது போன்ற பிரச்சனைகள் நடுவே, ஒரு வீட்டு உரிமையாளர் அல்லது வாடகைதாரர் எவ்வாறு தாங்கள் வீட்டில் சோலார் நிலையத்தை நிறுவுவது?’ என்ற கேள்வி எழுவது இயற்கை தான்.
ஆனால், மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போல நீங்கள் உங்கள் வீட்டில் சோலாரைப் பொருத்த வேண்டும் என முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக ஏதேனும் ஒரு வழி பிறக்கும்.
ஒரேயடியாக எல்லா பேனல்களையும் ஒரே இடத்தில், பெரிய பீஸாக பொருத்தாமல் இடத்திற்கு ஏற்றார் போல் பிரித்து பொருத்தலாம்.
1.சூரிய ஒளி படுகின்ற வெளிப்புறச் சுவர்கள்,
2. சன் ஷேடுகளின் மேல்புறங்கள்,
3. பால்கனிகள்,
4.பால்கனியின் வெளிப்புற பக்கவாட்டு கைப்பிடி சுவர்கள்
போன்ற பல இடங்களில் தேவைக்கு ஏற்றார் போல நாம் சோலார்களைப் பொருத்த முடியும்.
மொட்டை மாடி போன்ற பெரிய இடத்தில் தான் சோலார் பேனல்களை பொருத்த வேண்டும் என்பது கிடையாது. மேலும் அது கூரை தளபரப்பு அல்லது தரைபரப்பாக இருக்க வேண்டிய அவசியமும் கிடையாது .
கைக்கட்டும் அளவில் சுவரை ஒட்டியபடி கூட சோலார் பேனல்களை எளிதாக பொருத்தலாம்.
இதுவே உங்களுக்கு நிறைய இடம் இருந்தால் பார்க்கிங் ஷெட்டின் கூரை, தரைப்பகுதியின் காலியிடங்கள், போர்டிகோவின் மேல் கூரை, கார்டனிங்க் கூரை எல்லாம் சோலார் பேனல்களை பொருத்தி இயற்கை மின்சாரத்திற்கு வடிவமைக்கலாம்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் மிகவும் நெரிசலான இடங்களை வசிக்கக் கூடியவர்கள் கூட, படத்தில் உள்ளதை போல காணும் இடங்களில் எல்லாம் சோலார் பேனல்களை பெரிய திரைகள் போல ஆங்காங்கே பொருத்தி அதிலிருந்து சூரிய மின்சாரத்தைப் பெறுகிறார்கள்.
அங்கே சில அப்பார்ட்மெண்ட் பில்டர்கள் சோலார் பேனல்களை மொட்டை மாடியில் பொருத்துவதற்கு பதிலாக கட்டடத்தின் ஒரு பெரும் பகுதி, வெளிப்புறச்சுவரையே தனியாக ஒதுக்கி சோலார் பேனல்களை பொருத்துவதற்கும் அதை பராமரிப்பதற்கு வழிகளை செய்து அங்கேயே பொருத்தி விடுகிறார்கள்.
வெயில் குறைவாக உள்ள வெளிநாட்டு மக்களுக்கே சோலாரின் அவசியம் பற்றி புரியும் போது, ஆண்டில் 11 மாதங்கள் வரை வெயிலிலேயே கிடந்து உழலும் நாம அந்த சோலாரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா?
வெளிநாடுகளில் பல வணிக வளாகங்கள், தொழில்மையங்கள், கல்வி நிலையங்கள் போன்றாவை முழுக்க முழுக்க சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தாலேயே இயங்குகிறது. இவர்கள் யாரும் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பதே கிடையாது. அங்குள்ள அரசுகளும் தெருவிளக்குகள் அனைத்தையுமே சோலார் மின்மயமாக்கி விட்டது.
ஏறத்தாழ 70% நாடுகளில் உள்ள ஐரோப்பிய நாடுகளின் சாலைகளின் விளக்குகள் சோலார் மூலமாகவே ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், இங்கு அதிக மின்கட்டணத்திற்கும், அடிக்கடி அறிவிப்பின்றி ஏற்படும் மின்தடைக்கும் இடையில் மாட்டி அல்லல் பட்டு கொண்டிருக்கிறோம்.
இங்கே உள்ள ஏராளமான அரசு கட்டிடங்களில் கூட இன்னும் சோலார் மற்றும் காற்றாலை மின்சாரம் வந்தபாடில்லை. இவ்வளவு ஏன் சோலார் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டிருக்கும் அரசு சோலார் துறைக் கட்டிடங்களில் கூட 100% சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் சோலார் மின்சாரம் கிடைக்கிறதா?’ என்பது கேள்விக்குறியே?
இந்த நாட்டில் தான் ‘இரண்டு மாதங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் கூட மின்கட்டணமாய் செலுத்துவேன். ஆனால் சோலாரை பொருத்தவே மாட்டேன்’ என சோலாரைப் பற்றியே சிந்திக்காத நிறுவனங்களும் அலுவலகங்களும் ஏராளமாக இருக்கின்றன.
“வீட்டுக்கு வீடு சோலார்” என்கிற புரட்சி வருவது இருக்கட்டும். முதலில் இது போன்ற பெரிய நிறுவனங்கள் சோலார் பக்கம் கவனத்தை திருப்ப வேண்டும். அப்போது தான் மின் தேவை கணிசமாக குறைந்து, மின் தடைகள் குறையும்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2153007
|