124 ஆண்டு கட்டடம் முன் பக்கம் பார்ப்பதற்கு மெல்லிய தகட்டினால் அமைந்தது போல் அகலம் குறைவான கட்டமாக அதிர்ச்சிகரமாக தோன்றும். ஆனால், இந்தக் கட்டடம் ஒரு முக்கோண வடிவ நிலத்தில் ஒரு தெருமுனையில் அமைந்த கட்டடமாகும். நியூயார்க் நகரின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் இந்த கட்டுமானம் பிளாட்டயர்ன் கட்டிடம் ( Flatiron Building) ஆகும்.
துணிகளைத் தேய்க்கப் பயன்படும் இஸ்திரி பெட்டியின் (Flatiron) வடிவத்தை ஒத்திருப்பதால், இது ‘பிளாட்டயர்ன் கட்டிடம்‘ என்ற செல்லப்பெயரைப் பெற்றது. 1902-ஆம் ஆண்டு கட்டிடக் கலைஞர் டேனியல் பர்ன்ஹாம் என்பவரால் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்டது.
இது மட்டுமல்ல மன்ஹாட்டன் நகரின் மிகவும் சவாலான, குறுகலான ஒரு நிலப்பரப்பை, உலகின் மிகச்சிறந்த கட்டிடக் கலை அதிசயமாக மாற்றிய பெருமை இவரையே சேரும்.
அந்த நகரத்தின் பிராட்வே மற்றும் ஐந்தாவது அவென்யூ (Fifth Avenue) சந்திக்கும் கூர்மையான முனையில் அமைந்துள்ள இந்த 22 மாடி கோபுரம், நகரின் கட்டட அமைப்பையே தன் வியத்தகு முக்கோண வடிவத்தால் ஈர்க்கிறது.
இதன் ‘போக்ஸ்-ஆர்ட்ஸ்’(Beaux-Arts) முகப்பு வடிவமைப்பு, பாரம்பரிய அழகியல் கலைநயத்தையும், அக்காலத்தின் எஃகு-கட்டமைப்பு (Steel-frame construction) தொழில்நுட்பத்தையும் ஒருசேரக் காட்டுகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகியும், இக்கட்டிடம் இன்றும் ஆச்சரியமூட்டும் வகையில் புதுமையுடன் காட்சியளிக்கிறது. ஒரு சவாலானா வடிவியல் அமைப்பும், வலுவான நகர்ப்புற தோற்றமும், மாறிவரும் கட்டிடக் கலைப் போக்குகளையும் கடந்து அழியாமல் நிலைத்து நிற்கும் என்பதற்கு இந்த கட்டிடமே மிகச்சிறந்த சான்றாகும்.
கட்டுமானம் நடந்து கொண்டிருந்தபோது, இதன் விசித்திரமான முக்கோண வடிவம் மற்றும் தீவிரக் காற்றின் தாக்கம் காரணமாக, இக்கட்டிடம் சரிந்து விழுந்துவிடும் என்று பல உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர். ஆனால், அனைத்து இயற்பியல் மற்றும் பொறியியல் சவால்களையும் முறியடித்து, எஃகு மற்றும் சுடுமண் ஓடுகளின் நேர்த்தியான கலவையால் உருவான இந்த பிளாட்டயர்ன் கட்டிடம், இன்றுவரை உலகளாவிய கட்டடக்கலை,
கட்டுமானப்பொறியியலில் மைல்கல்லாக நிமிர்ந்து நிற்கிறது. புதுமுக கட்டுமானப் பொறியாளர்கள், மற்றும் வடிவமைப்பாளர்கள் அவசியம் ஆராயவேண்டிய கட்டுமானம் இதுவாகும்.
இந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பின்னணியும், அதற்கான பொறியியல் உத்திகளும் அஸ்திவாரம் முதல் இறுதி வடிவமைப்பு வரை மிகவும் தனித்துவமானவை.
20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நியூயார்க் நகரில் எஃகு சட்டகக் கட்டுமான முறை (Steel-frame construction) பரவலாக அறிமுகமாகத் தொடங்கிய தருணத்தில், இந்த மாபெரும் வானளாவிய கட்டிடம் சாத்தியமானது. பாரம்பரியமாக செங்கல் அல்லது கற்களைக் கொண்டு தாங்கும் சுவர்களை(Load-bearing walls)எழுப்பும் முறைக்கு மாற்றாக, உட்புற எஃகு தூண்களைக் கொண்டு முழு கட்டிடத்தின் எடையையும் தாங்கும் நவீன நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டது.
இதனால் மிகக் குறுகிய காலத்தில், அதாவது வாரத்திற்கு ஒரு மாடி என்ற வியத்தகு வேகத்தில் இதன் எஃகு எலும்புக்கூடு கட்டமைப்பு முழுமையடைந்தது.
கட்டிடத்தின் வடிவமைப்பு ஒரு பாரம்பரியக் கிரேக்கத் தூணின் (Classical Greek Column) மூன்று பகுதிகளை அடிப்படையாகக் கொண்டது. இதன் அடித்தளம் (Base) முரட்டுத்தனமான சுண்ணாம்புக் கற்களாலும், இடைப்பகுதி (Shaft)அழகிய ஜன்னல் வரிசைகளைக் கொண்ட சுடுமண் ஓடுகளாலும் (Terracotta tiles) இறுதி உச்சிப்பகுதி (Capital) மிக விரிவான அலங்காரக் வளைவுகளாலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தியானது மிக உயரமான கட்டிடத்தையும் பார்ப்பதற்கு ஒரு கலைப் பொருள் போல மாற்றியது. குறிப்பாக, பிராட்வே சாலை மற்றும் ஐந்தாவது அவென்யூ சந்திக்கும் இதன் கூர்மையான முனையானது வெறும் 6.5 அடி (2 மீட்டர்) அகலமும், 25 டிகிரி கோணமும் மட்டுமே கொண்டது. இவ்வளவு குறுகலான அமைப்பில் காற்றின் வேகமான அழுத்தத்தைத் Wind load தாங்குவதற்காக, இதன் பொறியாளர்கள் ஒரு பிரத்யேக எஃகு பிணைப்பு அமைப்பை (Steel bracing) வடிவமைத்தனர். அதனால் தான், இது கட்டிடம் எந்தவொரு அதிர்வோ அல்லது பாதிப்போ இன்றி நிலைத்து நிற்க உதவுகிறது.
இந்தக் கட்டிடத்தின் உட்புற இடவசதியும் அதன் முக்கோண வடிவத்தால் அசாத்தியமான சவால்களைக் கொண்டிருந்தது. இதன் மிகக் குறுகிய முனையில் அமையப் பெற்ற அலுவலக அறைகள், முன்னோக்கிச் செல்லச் செல்லக் குறுகலாகிக் கொண்டே சென்று, இறுதியில் ஒரு கப்பலின் முகப்பைப் போல (Prow of a ship) காட்சியளித்தன.
இத்தகைய தனித்துவமான கோணங்களைக் கொண்ட அறைகளுக்குள் பொதுவான செவ்வக வடிவ மேஜைகளையோ அல்லது மரச்சாமான்களையோ Furniture பயன் படுத்துவது இயலாத காரியமாக இருந்தது. இதன் காரண மாகவே, இந்தக் கட்டிடத்தின் உட்புறப் பயன்பாட்டிற்காகப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முக்கோண மற்றும் கோண வடிவ நாற்காலிகளும் மேஜைகளும் உருவாக்கப்பட்டன.
அதேபோல், எஃகு சட்டகங்களின் வழியே மின்தூக்கிகள்(Elevators) இயங்குவதற்கான இடமும் மிகவும் கணக்கிட்டுச் செதுக்கப்பட்டது. தொடக்க காலத்தில் நீராவி ஆற்றலால் இயங்கிய ஹைட்ராலிக் லிஃப்ட்கள் இதில் பயன்படுத்தப்பட்டன.
கட்டிடம் மிகவும் குறுகலாக இருந்ததால், மேல் தளங்களுக்குச் செல்லச் செல்ல மின் தூக்கி அமைப்புகளை நிறுவுவது ஒரு பொறியியல் வித்தை யாகவே பார்க்கப்பட்டது. இன்றும் கூட இதன் உச்சித் தளத்தை அடைய வேண்டுமெனில், பிரதான லிஃப்டில் இருந்து இறங்கி மற்றொரு சிறிய பிரத்யேக லிஃப்டிற்கு மாற வேண்டிய கட்டமைப்பு உள்ளது.
இவ்வாறு, வெளிப்புற முகப்பில் ஜிஎப்ஆர்சி GFRCபோன்ற நவீன கிளாடிங் தொழில்நுட்பங்களுக்குத் தாயகமாக விளங்கிய இக்கட்டிடம், உட்புறத்தில் விண்வெளிப் பொறியியலுக்கு இணையான இட மேலாண்மைக்கு உதாரணமாக திகழ்ந்து கட்டிடக் கலை வரலாற்றின் உன்னத மைல்கல்லாக இன்றும் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2536642
|